புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, ஜே.டி.(எஸ்) கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, பாரத் தர்ம ஜன சேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. இருப்பினும் நல்லாட்சி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு வரும் ஜனவரி மாதம் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.