![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38948703-neet-pti.webp)
சென்னை,
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே.இ.இ. என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதல் கட்ட முதன்மை தேர்வு கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 618 மையங்களில் 12.58 லட்சம் பேர் எழுதினர்.இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது. தேர்வை எழுதிய மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வில் 14 பேர் முழு மதிப்பெண் (100 மதிப்பெண்) பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் சுனய் யாதவ் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று தேசியளவில் 25-வது இடத்தை பிடித்துள்ளார்.இதுதவிர, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
அடுத்தகட்டமாக ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மை தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.