![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38974590-9.webp)
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி பிராமடத்தை சேர்ந்தவர் தீபு பிலிப்(வயது35), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காசர்கோடு வெள்ளரிக்குண்டு பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவருடன் சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு மற்றொரு பெண்ணுடன் தலைமறைவானார். அந்தப்பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டில் தலைமறைவாக வாழ்ந்தார்.
பின்னர் அந்தப்பெண்ணையும் கைவிட்டு விட்டு மீண்டும் கேரளாவுக்கு வந்து எர்ணாகுளத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் சிறிதுகாலம் வாழ்ந்து வந்தார். அவர் மீதான மோகம் தணிந்ததும் தீபு பிலிப் மீண்டும் தனது லீலைகளை காட்ட தொடங்கினார். இந்தநிலையில் தீபு பிலிப்புக்கு ஆலப்புழையை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரையும் திருமணம் செய்து அர்த்துங்கல் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் இவரது நடத்தை மீது சந்தேகமடைந்த 4-வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் தீபு பிலிப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கனவே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 4-வதாக இந்தப்பெண்ணை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தீபு பிலிப்பை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.