ஜெய்ஸ்வால் தனது அணுகுமுறையை மாற்றுவார் என நான் நினைக்கவில்லை - இந்திய முன்னாள் பயிற்சியாளர்

3 months ago 22

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் தனது அணுகுமுறையை மாற்றுவார் என நான் நினைக்கவில்லை என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால் தனது அணுகு முறையை மாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அவர் முதல் முறையாக சென்றாலும் கடந்த 2 முறை அங்கே நமது அணி வென்றுள்ளது பெரிய சாதகமாகும்.

அது அவரைப் போன்ற இளம் வீரர்க்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற அணிகள் கடந்த கால தோல்விகளால் தயங்குவார்கள். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 2 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே தற்போது சூழ்நிலை கச்சிதமாக இருக்கும். நல்ல டெக்னிக்கை கொண்டுள்ள ஜெய்ஸ்வால் ரன்கள் அடிப்பதற்கான பசியை கொண்டுள்ளார் என்பதே சாவியாகும்.

அதனால் அவர் ஆஸ்திரேலியாவில் அசத்தாமல் இருப்பதை நான் பார்க்கப் போவதில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து அசத்தும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் நிதானமாக துவங்கினார். ஆனால் சூழ்நிலைகள் தமக்கு சாதகமானதும் அவர் தனது இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த பன்முகத்தன்மை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவருக்கு உதவும்.

ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வதே அவருடைய ஆட்டமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போல ஆஸ்திரேலியாவில் சீம் மூமென்ட் இருக்காது. நியூசிலாந்தில் கொஞ்சம் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ், கேரி மட்டுமே இருக்கும். அதற்கு மட்டும் அவர் தன்னை உட்படுத்திக் கொண்டால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article