ஜெயில் ஆபீசரை மணிக்கணக்கில் நிற்க வைத்து பழிதீர்த்துக் கொண்ட போலீஸ் அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 days ago 2


‘‘சிறைக்குள்ள செல்போன் கொண்டு போக அனுமதியில்லை என சொன்னதற்காக மணிக்கணக்கில் ஜெயில் ஆபீசரை கால் கடுக்க நிக்க வைச்சுட்டாராமே போலீஸ் அதிகாரி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாம்பழ ஊரில் மத்திய ஜெயில் ஒண்ணு இருக்கு.. சமீபகாலமாக இச்சிறையில் செல்போன் புழக்கம் அதிகரிச்சதாக சொல்றாங்க.. பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கைப்பேசி எப்படி உள்ளே செல்லும் என்ற கேள்விக்கு விடையே இல்லையாம்.. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிடிபடும் செல்போன்களை போலீசில் ஒப்படைப்பாங்களாம்.. ஆனால், போலீஸ் அதிகாரிகளோ, புகாரை வாங்கி வழக்குப்பதிவு செய்வதில் பெரும் அலட்சியம் காட்டுவாங்களாம்.. சமீபத்துல ரெண்டு போலீஸ் ஆபீசர்ஸ் வழக்கு தொடர்பாக விசாரிக்க ஜெயிலுக்கு போனாங்களாம்.. வாசலில் நின்ற வாடர்ன், தொப்பியை அணிந்து கொண்டு சல்யூட் அடிக்காம அலட்சியமாக நின்றிருக்காரு..

ரெண்டாவது தடவையாக ஒரு அதிகாரி மட்டும் போயிருக்காரு.. அங்கிருந்த சின்ன அதிகாரி ஒருவர், சிறைக்குள் செல்போனை கொண்டுபோக அனுமதி இல்லை, வெளியே வச்சிட்டு உள்ளே போங்கன்னு சொன்னாராம்.. இதனால கோபத்தின் எல்லைக்கே போன அந்த அதிகாரி, ஓடமும் ஒரு நாள் வண்டியில ஏறித்தானே ஆகணும்னு சொல்லிட்டு போனாராம்.. அவர் சொன்னது போலவே பிடிபட்ட செல்போனை எடுத்துக்கிட்டு, அதிகாரி ஒருவர் போலீஸ் ஸ்டேசன் போயிருக்காரு.. இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதுபோல அந்த அதிகாரி, மூன்று நாட்கள் புகாரை வாங்கலையாம்.. இறுதியாக செல்போனை வெளியே வச்சிட்டுபோங்கன்னு சொன்ன வரை கண்டா வரச்சொல்லுங்கன்னு அனுப்பி வைச்சியிருக்காரு… இதனால ரொம்பவே ஷாக்கான ஜெயில் ஆபீசர்ஸ், அந்த சின்ன அதிகாரி கையில புகார் மனுவை கொடுத்து அனுப்பினாங்களாம்..

இவர் வருவதை தெரிந்து கொண்ட அந்த போலீஸ் அதிகாரியோ, இதோ வருகிறேன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாராம்.. இவ்வாறு 3 மணி நேரம் காக்க வைத்ததோடு, உட்கார சொல்லாம நிக்கவச்சே பேசினாராம்.. அந்த சின்ன அதிகாரி கால்கடுக்க கெஞ்சி கேட்டுக்கிட்ட பிறகு புகார் மனுவை வாங்கினாராம்.. இதுகுறித்து ஜெயில் டிஜிபிக்கு, ஜெயில் ஆபீசர்ஸ் அறிக்கையை அனுப்பி வச்சியிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலீஸ் வாகனம் மட்டுமல்ல.. லஞ்ச ஒழிப்புத்துறையே வந்தாலும் எங்கக்கிட்ட தப்ப முடியாது என்கிற வகையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதாமே அரசு வாகனம் பழுதுபார்க்கும் மையத்தில்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகரில் அரசு வாகனங்களை பழுது பார்க்கும் மையம் செயல்பட்டு வருது.. இங்கு 12 மெக்கானிக்குகள் வேலை செஞ்சிட்டு இருக்காங்க..

போலீஸ் வாகனங்கள், தீயணைப்புத் துறை வாகனங்கள் என அரசு துறைகளுக்கு சொந்தமான ஏராளமான வாகனங்கள் சர்வீஸ்க்கு வருது.. ஆனா அங்கு வேலை செய்யுற மெக்கானிக்குகளுக்கு புதிய மாடல் வாகனங்கள் பழுது பார்க்க தெரியாம திணறிகிட்டு வர்றாங்களாம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி போலீஸ் வாகனம் ஒன்னு சர்வீஸ்க்கு வந்திருக்கு.. அந்த வாகனத்தை சரியாக பழுது பார்க்காததோடு போலீஸ்காரரிடமே மாமூல் கேட்டு அதிர்ச்சியை கொடுத்தார்களாம்.. அங்கு சர்வீஸ்க்கு வருகிற ஒவ்வொரு துறை வாகனத்திற்கும் ஒரு ரேட் நிர்ணயம் செய்திருக்கிறார்களாம்.. அதை கொடுத்தாதான் வேலையே நடக்குமாம்.. இதனால வண்டிய சர்வீஸ் கொண்டு போகுறதற்கே டிரைவர்கள் அச்சப்படுகிற அளவுக்கு அங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறதாம்.. லஞ்ச ஒழிப்பு துறையோட வண்டியே இருந்தாலும் எங்ககிட்ட சர்வீஸ்க்கு வந்தா தப்பமுடியாதுன்னு சவால் வேறு விடுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியில் எதிரெதிர் திசையில் அரசியல் செய்த இருவருக்குமே பதவி கொடுக்காமல் ‘கல்தா’ கொடுக்கப்பட்டதால் அப்செட் மோடிற்கு சென்றுவிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் மட்டுமின்றி அவருக்கு எதிராக கோஷ்டி நடத்திய மாஜி மாவட்ட தலைவரும் செம அப்செட் மோடில் உள்ளார்களாம்.. யாரும் கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த மாஜி தேசிய செயலாளருக்கு திடீரென ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டதும், நமக்கு கட்சியில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்று அவராகவே ஒரு முடிவுக்கு வந்து, தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவில் இருந்தாராம்.. வெளிநாடு சென்றிருந்த மாஜி போலீஸ்காரர் திரும்பி வந்ததும், அவர் மீண்டும் ஆக்டிவ் மோடிற்கு வந்துவிட்டாராம்..

இதனால், மீண்டும் யாரும் கண்டுகொள்ளப்படாத நிலைக்கு சென்றுள்ளாராம்.. அதே நேரம் மாவட்ட தலைவர் பதவியையாவது தன்னுடைய ஆதரவாளர்கள் யாருக்காவது வாங்கிவிடலாம் என்ற முனைப்பில் இருந்தவருக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்.. அவருக்கு எதிராக இருந்த மாவட்ட தலைவரை மாற்றிவிட்டு, இவருக்கு வேண்டப்படாத ஒருத்தரை புதிதாக மாவட்ட தலைவராக்கி விட்டனராம்.. இதனால், மாஜி தேசிய செயலாளரின் அனைத்து அரசியல் கணக்கும் தவறாய் முடிந்துள்ளதால், இலவு காத்த கிளியைப் போன்ற நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஆதரவு அடிபொடிகளிடம் ரொம்பவே வருத்தப்பட்டு கூறிவருகிறாராம்.. இது இப்படி என்றால், இவருக்கு எதிராக மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருந்த மாவட்ட தலைவர், தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாராம்.. ஆனால், அவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.. இதனால், ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் அரசியல் செய்த இருவரும் பதவி கிடைக்காமல் அப்செட் மோடிற்கு சென்றுவிட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் சிக்கனநாதன் கறார் காட்டுனதால சலசலப்பு இல்லாமல் ரொம்பவே அமைதியாக நடந்து முடிந்ததாமே தேநீர் விருந்து..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் குடியரசு தினவிழாவையொட்டி முதல்வர், அமைச்சர்கள், அரசியல்கட்சிகள், அதிகாரிகளுக்கு கவர்னர் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்தாண்டு தேநீர் விருந்துக்கான அழைப்பு எத்தனை பேருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என துணைநிலை ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்.. 800 அழைப்பிதழ்களுக்கு மேல் இருக்கும்னு அதிகாரிகள் தெரிவித்தாங்களாம்.. நீண்டதொரு செலவு பட்டியலையும் அவர் கையில் கொடுத்து இருக்காரு.. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கவர்னர், இவ்வளவு பேருக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்ப தேவையில்லையென பட்டியலை 250 ஆக குறைத்ததோடு, டீ, ஸ்நாக்ஸ் என்ற அளவில் விருந்து இருந்தால் போதும், இரவு உணவு வழங்கும் அளவுக்கு தேவையில்லை என செலவையும் குறைக்க சொல்லிவிட்டாராம்..

ஏற்கனவே இசை இருந்தபோது, கவர்னர் மாளிகை செலவு அதிகரித்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போதை கவர்னரோ, படு சிக்கனமாக இருக்கிறாராம்.. அதோடு தனது சொந்த செலவுக்கு கவர்னர் செயலகம் ஒருபோதும் செலவு செய்யக்கூடாதுன்னு கறாராக கூறிவிட்டாராம்.. அதேபோல் தேநீர் விருந்தும் எந்தவித சலசலப்பும், மரியாதை குறைபாடு ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்ததாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post ஜெயில் ஆபீசரை மணிக்கணக்கில் நிற்க வைத்து பழிதீர்த்துக் கொண்ட போலீஸ் அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article