ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

3 months ago 12

சென்னை,

1991 முதல் 1996 வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா செயல்படபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

அதேவேளை, சிபிஐ சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஜெயலலிதா 2016ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படியும், கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தீபா, தீபக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபா, தீபக் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், சொத்து ஆவணங்கள், வெள்ளி பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியை கர்நாடக அரசு நேற்று தொடங்கியது.

மொத்தம் 481 வகையான நகைகள் இருக்கிறது. இதில் மதியம் 2 மணி வரை 150 நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. எண்ணிக்கைப்படி நகைகள் சரிபார்க்கப்பட்டன. அதன் எடை, அவை தங்கம், வைரம் தானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த விலை மதிப்புமிக்க நகைகளை கொண்டு செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30 போலீசார் பெங்களூரு வந்தனர். இந்த பணிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 481 வகையான நகைகளில், 290 நகைகளின் எடையளவு மதிப்பீட்டு பணி நேற்று நிறைவு பெற்றது. மீதியுள்ள 191 நகைகளும் கர்நாடக கருவூல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று மீதமுள்ள நகைகள் நீதிபதி முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், 481 வகையான நகைகளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

27 கிலோ தங்க நகைகள், வைர நகைகளுடன்,1562 ஏக்கர் சொத்து ஆவணங்களும் கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. தங்க ஆபரணங்கள் உரிய மதிப்பீடு செய்து 6 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டதாக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஜாவர்கி தெரிவித்தார். அதில், 1.2 கிலோ எடையுள்ள ஒட்டியாணம், 1 கிலோ எடையுள்ள கிரீடம், 60 கிராம் எடை கொண்ட தங்க பேனா, தங்க வாள், தங்க வாட்ச், ஜெயலலிதா முக பொறித்த தட்டு ஆகியவையும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.  

Read Entire Article