சேலம்: ஜெயலலிதா பறித்த மந்திரி பதவியை கொடுத்தவர் சசிகலா என்பதால், அவருக்காகவே எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதத்தயாராகி விட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், மாஜி மந்திரி செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிமுகவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் சசிகலாவுக்காகத்தான் எடப்பாடியுடன் மோதலை தொடங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையனின் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார். பெண் விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அதன்பிறகு எம்எல்ஏவாகத்தான் செங்கோட்டையன் நீடித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதம் பெறப்பப்பட்ட நிலையில், சசிகலாவை முதல்வராக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்தனர். அந்நேரத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் அவர் சிறைக்கு புறப்பட்டார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வான நிலையில், செங்கோட்டையனும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு சசிகலாவே காரணம். அவர் கூறியதையடுத்து எடப்பாடி அமைச்சரவையில் செங்கோட்டையனும் பங்கேற்றார். ஒட்டுமொத்த மந்திரி சபையே சசிகலா அமைத்ததுதான். இதனால் சசிகலாவின் முழு ஆதரவாளராகவே செங்கோட்டையன் மாறினார். எப்படியாவது சசிகலாவை அதிமுகவில் இணைத்துவிட வேண்டும் என்பதில் செங்கோட்டையன் உறுதியாக இருந்தார்.
இதற்காக 6 மாஜி அமைச்சர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலாவோ அமைதியின் சொரூபமாகவே இருந்தார். ஒரு ஆட்சியையே அமைத்துக் கொடுத்து சென்றேன், என்னையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்களா? என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தாலும் அதனை அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கட்சி தனக்காக உடைந்துவிட கூடாது என்பதற்காக பொறுமையாகவே இருந்தார். என்றாலும் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவே இல்லை.
எத்தனை காலம்தான் இப்படியே விடுவது என நினைத்த செங்கோட்டையன் காத்திருந்தார். இவருக்கு எதிராக மாஜி மந்திரி கே.சி.கருப்பண்ணனை எடப்பாடி பழனிசாமி வளர்த்தார். அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கினார். நேரம் பார்த்து காத்திருந்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்ற காரணத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இப்போதிருந்தே பிரச்னையை கிளப்பி விட்டால்தான் சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என்ற திட்டத்துடன் களம் இறங்கியதாகவும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். எடப்பாடியுடன் மோதுவதற்கு தயாராகிவிட்ட செங்கோட்டையன் இனிமேல் அடிபணிய மாட்டார் என்றும் கூறுகின்றனர்.
* எடப்பாடியை சசிகலாவிடம் அழைத்து சென்ற கதை
சசிகலாவின் முக்கிய ஆதரவாளரான எடப்பாடி சுரேஷ் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டுவாக்கில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் சரவணன். அவர், எடப்பாடி பழனிசாமி மீது ஜெயலலிதாவிடம் புகார் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ஜெயலலிதா, கொடநாடு பங்களாவுக்கு எடப்பாடியை வரவழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, இனிமேல் கட்சியில் இருந்து என்னை தூக்கி விடுவார்கள். கரைவேட்டியும் கட்டமுடியாத நிலை ஏற்படும். பஸ் ஸ்டாண்டில் கடையை ஏலம் எடுத்து அங்கே அமர்ந்து கொள்ளலாம் என கூறினார். அந்தநேரத்தில் எடப்பாடிக்கு ஆறுதல் கூறி அவரை நடராஜன் மூலமாக சசிகலாவிடம் அழைத்துச் சென்றேன். பிறகு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது எனது கையை பிடித்துக்கொண்ட எடப்பாடி, இது கை இல்லை. வேறு யாரையும் சசிகலாவிடம் அழைத்துச் சென்றுவிடாதே. நீயும் எம்எல்ஏ பதவிக்கு ஆசைப்பட்டுவிடாதே என கூறினார்.
அவர் மந்திரி ஆனவுடன் 6 மாதம் என்னை காரில் அழைத்துச் சென்றார். பின்னர் அடுத்த தேர்தலில் நான் சீட் கேட்டுவிடுவேன் என நினைத்து என்னை முற்றிலும் ஒதுக்கினார். தூரத்தில் இருந்து பார்த்தால் எடப்பாடி நல்லவர் போலத்தெரியும். நெருங்கிப் பழகினால் தான் அவரது உண்மையான உருவம் தெரியும். என்றாலும் விரைவில் அதிமுக ஒன்றிணையும். கட்சியில் இருந்து எடப்பாடி முற்றிலும் அகற்றப்படுவார்’ என்றார்.
The post ஜெயலலிதா பறித்த மந்திரி பதவியை கொடுத்தவர் என்பதால் சசிகலாவுக்காக எடப்பாடியுடன் மோத தயாரான செங்கோட்டையன்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.