
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
எனினும், இந்த நிகழ்ச்சியின் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், இந்த முறை பங்கேற்காதது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.