டெல்லி : ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை ஒழுங்கப்படுத்த கோரிய மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அதிகமான அல்லது பொருத்தமற்ற மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
அதிக விலை உள்ள முன்னணி நிறுவனங்களின் மருந்துகளையே வாங்குவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இது சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவுகளை அதிகரிப்பதாகவும் கூறினார். எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதால் அந்த மருந்தை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேரடி வரிக்கான ஒன்றிய வாரிய அறிக்கையின்படி டோலோ 650 மாத்திரை உற்பத்தியாளர்கள், மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை வழங்குவதாக சுட்டிக் காட்டினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராஜஸ்தானில் ஒவ்வொரு மருத்துவ நிபுணரும் ஜெனரிக் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாகம் உத்தரவு அமலில் உள்ளதாக தெரிவித்தனர். எந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் உள்ள மருந்தையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியாது என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இதே போன்று ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் எந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால் மிகப்பெரிய மாற்றத்தை இது கொண்டு வரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
The post ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும், எந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.