ஊட்டி, மே 23: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த மலர் கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை காண நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில், பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையிலும், சிறுவர்களைக் கவரும் வகையிலும் 70 அடி நீளம், 20 அடி உயரத்தில் பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன், ரோஜா, சாமந்தி போன்ற 2 லட்சம் மலர்களால் ஆன பண்டைய அரசர் கால அரண்மனை பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 அடி உயரம் 35 அடி நீளம் கொண்ட அன்னபட்சி 50,400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மலர்த் தொட்டிகள் மற்றும் 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா மலர்களால் கல்லணை மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசைக்கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு போன்ற பல்வேறு மலர் அலங்கார வடிவமைப்புகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
The post மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்ட அலங்காரங்களில் வாடிய மலர்களை மாற்றி புதிய பூக்கள் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.