
அமராவதி,
ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டி மீது பணமோசடி, லஞ்சமாக நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக 2011ம் ஆண்டில் சிபிஐ விசாரணை நடத்தி கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில் ஜெகன் மோகனின் ஆடிட்டரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. விஜய் சாய் ரெட்டி மற்றும் புனித் டால்மியா ஆகியோர் இணைந்து ரகுராம் சிமெண்ட்டின் பங்குகளை பிரெஞ்சு நிறுவனமான PARFICIM-க்கு ரூ.135 கோடிக்கு விற்றதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில், 55 கோடி ரூபாய் ஹவாலா மூலம் ஜெகனுக்கு ரொக்கமாக வழங்கப்பட்டது என்றும், இது மே 2010 மற்றும் ஜூன் 2011 க்கு இடையில் டெல்லியில் வருமான வரித்துறை சோதனையின்போது மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அந்த வழக்கை அமலாக்கத்துறை தற்போது விசாரித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் உள்ள 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், 377 கோடி ரூபாய் மதிப்புள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் ஆகியவை தற்போது முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட தனது நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பு 793 கோடி ரூபாய் என்று டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான ரகுராம் சிமெண்ட் நிறுவனத்தில் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்கு பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேரில் சுரங்கம் அமைப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.