
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், 'பிரதர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.