
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா வருகின்ற 7.7.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக திருவிழாவின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (10.5.2025) தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் கோவில் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைத்துறை திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் உட்பட அலுவலர்கள் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.
திருச்செந்தூர் உட்கோட்டம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சரகம், சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்சி பெற்ற இரண்டாம் படை வீடாகும். தைப்பூசம், மாசித்திருவிழா, வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்தசஷ்டி போன்ற புராதான திருவிழாக்கள் தொன்று தொட்டு வழிபாடு முறையில் மேற்கொண்டு வரும் நிலையில் சமீப காலங்களில் பௌர்ணமி தோறும் பெருந்திரளான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.
இந்த நிலையில் ரூ.300 கோடி செலவில் அரசு சார்பில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள் 66 ஏக்கர் நிலங்களில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக திருவிழா 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வரும் 7.7.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சுமார் 10 லட்சம் பக்தர்கள் மற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என கணக்கிடப்பட்டு முன்னேற்பாடாக திருச்செந்தூர் கோவில், நகர் மற்றம் சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், அறிவிப்பு ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முன்னேற்பாடாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் கண்காணிப்பு கேமிராக்கள் கொண்டு கண்காணிக்க ஒரு காவல் கட்டறை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டு நேற்று (10.5.2025) தூத்துக்கடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து செயல்பாட்டுக்கு வந்தது.
திருச்செந்தூர் நகர்ப்பகுதிகளில் இருந்து தற்சமயம் 32 கண்காணிப்பு கேமிரா பதிவுகள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு மேற்சொன்ன கண்காணிப்பு பதிவுகள் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிப்பு கேமிராக்கள் பதிவுகள் மூலம் ஏதேனும் ஒரு பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறும் பட்சத்தில் அந்த இடத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வான்தந்தி செய்தி கருவி பொருத்தப்பட்டு தகவல் பரிமாறப்படும்.
இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிப்பு கேமிராக்கள் பதிவுகள் மூலம் ஏதேனும் விபத்தோ அல்லது போக்குவரத்து நெரிசலோ அந்த பகுதிக்கு அருகாமையில் இருக்கும் போக்குவரத்து காவலர் அல்லது சட்டம்- ஒழுங்கு காவலருக்கு அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் உடனடியாக நெரிசல் கலைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு அலுவல் பதிவேடுகள், பொதுநாட்குறிப்பு கொண்டு இரவு ரோந்து அதிகாரிகளை கொண்டு தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு அடையாளம் காணும் வகையில் கண்காணிப்பு கேமிராக்களும், முக அடையாளத்தை வைத்து வரும் நபர்களை கண்டுபிடிக்கவும், வெகு நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவைகளும் கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.
திருச்செந்தூர் நகர், பேருந்து நிலையம்,ரயில் நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கவும் மேலும் திருச்செந்தூர் நகர்ப்பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று அவைகளும் கட்டுப்பாட்டு மையத்தில் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
திருச்செந்தூர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவு பெற்றவுடன் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளும், கட்டுப்பாட்டு மையத்தில் இணைக்கப்பட்டு கோவிலின் கூட்ட நெரிசல், சிறு சிறு சச்சரவுகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் களைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு மையத்தால் திருச்செந்தூர் நகரில் இனிவரும் எந்த திருவிழாவும் வெகு சிறப்பாக டிஜிட்டல் பாதுகாப்புடன் நடந்து முடிய இது ஒரு மைல்கல் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.