
குமரி ,
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி கோவிலின் கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்தது. மேலும் நவம்பர் 24-ந் தேதி ரூ.1.70 கோடியில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதன்படி காலை 9.10 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் அய்யர், மேல்சாந்தி பகவதி குருக்கள் ஆகியோர் கலசத்தில் புனிதநீர் ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் தலைவர் சைதன்யானந்த மகராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.