ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலாகிறது; ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்: வழிமுறைகள் வெளியீடு

1 week ago 3

சென்னை: இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது. தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், ஒவ்வொரு பயனருக்கும் மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.

அதன்படி, ஐஆர்சிடிசி இணையதள கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று ‘மை அக்கவுன்ட்’ என்ற தலைப்பின் கீழ் இருக்கும் ‘ஆத்தென்டிகேட் யூசர்’ (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்ததும், ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள்
n முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்குச் சென்று லாகின் செய்யுங்கள்.
n அடுத்து Profile பிரிவில் Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
n அதன்பின்னர் ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரை சரியாக உள்ளிடவும்.
n இதை தொடர்ந்து Send OTP என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் ஓடிபி-ஐ உள்ளிட்டு Verify OTP ஐ கிளிக் செய்ய வேண்டும் பின்னர் KYC விவரங்கள் சரிபார்க்கப்படும்.
n அடுத்து Update என்பதை கிளிக் செய்தால் போதும். உங்களது ஆதார் கணக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை எப்படி அங்கீகரிப்பது
n ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
n அடுத்து My Account எனும் பிரிவில் Authenticate User என்பதைத் தேர்வு செய்யவும்.
n அதன்பின்னர் உங்களது ஆதார் எண்ணை
உள்ளிடவும். அதை தொடர்ந்து Verify Details என்பதை கிளிக் செய்யவும்.
n இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
n உங்கள் மொபைல் போனுக்கு வந்த ஓடிபி-ஐ திரையில் உள்ளிட்டு Submit button கிளிக் செய்யவும். இதை தொடர்ந்து ஆதார் அமைப்பிடம் இருந்து உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
n குறிப்பாக சரிபார்ப்பு வெற்றி பெற்றால் திரையில் அதற்கான தகவல் காண்பிக்கப்படும் அல்லது MY ACCOUNT என்ற பிரிவில் Authentication status என்பதை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை ஆதார் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் அது திரையில் தெரியும். நீங்கள் சமர்ப்பித்த தகவல்களில் எதாவது தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண், ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த தட்கல் டிக்கெட்டை நாம் அனைத்து நேரங்களிலும் முன்பதிவு செய்துவிட முடியாது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. நீங்கள் நாளை இரவு ரயில் பயணம் செய்ய வேண்டியிருந்தால் இன்று காலையே தட்கல் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம் ஒரு நாளுக்கு முன்பாகவே திறக்கிறது. அதாவது ஏசி பெட்டியில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்ய காலை 11 மணிக்கும் புக்கிங் வசதி திறந்திருக்கும். இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது இதற்கான பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. ஐஆர்சிடிசியுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் பெற முடியாது. அதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

The post ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலாகிறது; ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்: வழிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article