
அஸ்தானா,
கஜகஸ்தானின் ஷிம்கெண்ட் நகரில் கடந்த மே 24-ந்தேதி நடந்த 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்தியாவின் பிரகாஷ் சரன் மற்றும் தவிஷ் பஹ்வா ஆகியோர் சூப்பர் டை-பிரேக்கர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை வசப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கமாகும். அவ்வாறு இந்திய வீரர் கைகுலுக்க வந்தபோது, பாகிஸ்தான் வீரர் இந்திய வீரரின் கையில் ஓங்கி முரட்டுத்தனமாக அறைவது போன்ற செய்கையை செய்தார்.
இருப்பினும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்திய வீரர் அமைதியாக விலகிச் சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும், பாகிஸ்தான் வீரரின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு, பின்னர் மே 10-ந்தேதி இருநாடுகளும் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.