ஜீன்ஸ் அணிந்ததற்காக காதலியை கொன்ற கொடூர வாலிபர் - ஆயுள் தண்டனை வழங்கிய கோர்ட்டு

5 hours ago 3

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது34). இவர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். எனினும் சந்தியா ஜீன்ஸ் போன்ற ஆடை அணிவது வினோத் குமாருக்கு பிடிக்கவில்லை. மேலும் அவர் மற்ற ஆண்களுடன் பேசுவதும் வாலிபருக்கு பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக வினோத் குமார், சந்தியாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது வழக்கம்போல ஜீன்ஸ் ஆடை மற்றும் ஆண்களுடன் பேசும் விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர், சந்தியாவை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் ஓட்டல் அறையில் இருந்து அவர் தப்பியோடினார்.

இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வாலிபர் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். எனவே சிகிச்சைக்கு பிறகு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில் வினோத்குமார், காதலியை கொலை செய்தது சாட்சியங்கள், ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக வினோத் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மேலும், "சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது போன்ற சில செயல்களில் ஈடுபட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர் வெறுப்புடன் இருந்ததாக சாட்சியங்கள் வெளிப்படுத்தி உள்ளன" என்று கோர்ட்டு தெரிவித்தது.

Read Entire Article