
நாட்டிங்காம்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்களும், டக்கெட் 140 ரன்களும், ஜாக் கிராலி 124 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்டெடுத்தார். சிறப்பாக ஆடி சதமடித்த பிரையன் பென்னட் 139 ரன்களில் அவுட்டானார். முடிவில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்துள்ளது. பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே இன்னும் 270 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இத்தகையை சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.