
சிவ வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நாள் பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷம் வரும். திரயோதசி திதி மாலையில் எப்போது இருக்கிறதோ, அந்த நாள்தான் பிரதோஷ பூஜை செய்ய உகந்த நாளாகும். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ நேரம் ஆகும். அன்றைய தினம் மாலை வேளையில், சிவன் கோவிலுக்குச் சென்று சிவ பெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு கிழமையிலும் வருகிற பிரதோஷத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கின்றன. அதுவே சனிக்கிழமை வரும் பிரதோஷத்துக்கு மகிமைகள் அதிகம் என்று சிவாகம நூல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை வெறுமனே சனி பிரதோஷம் என்று குறிப்பிடாமல் சனி மகா பிரதோஷம் என அழைக்கிறோம்.
மேலும் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. இந்த பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும், படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அவ்வகையில் இன்று (24.5.2025) சிவ பக்தர்களின் முக்கியமான வழிபாட்டு நாளான சனி மகா பிரதோஷ நாள் ஆகும். இதையொட்டி இன்று பிரதோஷ வேளையில் (மாலை) சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, நந்தி தேவருக்கான அபிஷேக ஆராதனைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மலர் அலங்காரத்துடன் அழகுற காட்சி தருவார் நந்திதேவர். இன்று மாலையில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம்.
பிரதோஷ விரதம் இருக்கும் பக்தர்கள் நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபட முடியாதவர்கள், வீட்டிலேயே பிரதோஷ விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம்.