ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக முகமது இஷாக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார்.