ஜிம்னாஸ்டிக்ஸ் ராணிகள்!

2 hours ago 1

ரொமானியாவில் உள்ள கான்ஸ்டான்டா எனும் இடத்தில், 1970ல் பிறந்து, வளர்ந்தவர் கமீலியா ஒய்னியா. ஐந்து வயதில் முதல் முறையாக பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டைத் தொலைக்காட்சியில் பார்த்தார்கமீலியா உடலை வில்லாக வளைத்து, கம்பி மீது நின்று வித்தைகளைக் காட்சிப்படுத்தும் ஜிம்னாஸ்டிக்ஸின் மீது கமீலியாவுக்குப் பெருங்காதலே உண்டானது.தொலைக்காட்சியில் பார்த்த ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களை வீட்டிலேயே செய்து பார்க்க முயற்சி செய்தார். கமீலியா. பிறகு எட்டு வயதில் மட்டேய் ஸ்டனேய் எனும் பயிற்சியாளரிடம் ஜிம்னாஸ்டிக்ஸை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஜிம்னாஸ்டிக்ஸுக்கு முக்கியமானது உணவுக்கட்டுப்பாடு. இஷ்டம் போல சாப்பிடுகின்ற குழந்தைப்பருவத்திலேயே உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்.பத்து வயதிலேயே ரொமானியா அளவில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுவிட்டார். ரொமானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணிக்குப் பயிற்சி தரும் ஆட்ரியன் கோராக், ஆட்ரியன் ஸ்டான், மரியா கோஸ்மா ஆகியோரிடம் பயிற்சி பெற்று, தனது 14 வயதில் சர்வதேச அளவிலான பால்கான் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

இந்தப் போட்டியில் ரொமானியாவின் பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி பரிசைத் தட்டியது. அணிக்கு முக்கிய பங்களிப்பைத் தந்தார் இளம் வீராங்கனையான கமீலியா. ஆம்; ஆல்-அரவுண்ட் ஜிம்னாஸ்டிக்ஸில் இரண்டாம் இடத்தையும், தரையில் செய்கின்ற ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் முதல் இடத்தையும், வால்ட் மற்றும் கம்பி மீதான ஜிம்னாஸ்டிக்ஸில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.தனது 15 வயதில், அதாவது 1985ம் வருடம் மான்ட்ரீலில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார். இதில் ஆல் -அரவுண்ட் ஜிம்னாஸ்டிக்ஸில் ஒன்பதாவது இடத்தையும், கம்பிகளின் மீதான ஜிம்னாஸ்டிக்ஸில் நான்காவது இடத்தையுமே பிடிக்க முடிந்தது.1986ல் பெய்ஜிங்கில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் ரொமானியா சார்பாக கலந்துகொண்டு ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கினார். இதிலும் ஆல் -அரவுண்டில் ஒன்பதாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இதற்குப் பிறகு 1987ம் வருடம் மாஸ்கோவில் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடந்தன. இதிலும் கமீலியா ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆல் – அரவுண்டில் எட்டாம் இடத்தைப் பிடித்தார். இதே வருடத்தில் நெதர்லாந்தில் வேர்ல்டு ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.இதில் யூஜினியா கோலியா, செலஸ்டினா போபா, டானியல்லா சிலிவாஸ், அரிலீயா டோப்ரே, சாபோ ஆகிய புகழ்பெற்ற ரொமானியா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளுடன் சேர்ந்து ஓர் அணியாக பங்குபெற்றார் கமீலியா.இதில் கமீலியாவின் அணி தங்கப்பதக்கத்தை வென்று ரொமானியாவுக்குப் பெருமை சேர்த்தது. குறிப்பாக ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் கமீலியா, டோம்ப்ரே, சிலிவாஸ் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான டாப் ஸ்கோர்களைப் பெற்றனர். ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றிலேயே ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் ஒரே மாதிரியான டாப் ஸ்கோர்களைப் பெற்றது இதுவே முதல்முறை. முக்கியமாக ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் கமீலியா காட்டிய வித்தைகளும், புதுமைகளும் பிற்காலத்தில் பிரேக் டான்ஸில் சிறப்பம்சங்களாக மாறின என்பது குறிப்பிடத்தக்கது.

1988ல் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் ரொமானியா அணி சார்பில் பங்குபெற்ற கமீலியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் முடிந்தவுடனே தனது ஓய்வை அறிவித்தார். சர்வதேச அளவில் சில வருடங்களே பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாடினார் கமீலியா.ஆனால், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கமீலியா செய்யும் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களையும், ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸையும் செய்ய இன்னொரு வீராங்கனை இன்னும் பிறக்கவில்லை. ஓய்வுக்குப் பிறகுஇத்தாலியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக சில வருடங்கள் பணியாற்றிய கமீலியா, 1994ல் ரொமானியா திரும்பினார்.சிறு வயதில் தனக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொடுத்த மட்டேயுடன் சேர்ந்து ரொமானியாவின் இளம் வீராங்கனைகளுக்கு ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியளிக்க ஆரம்பித்தார்.இத்தாலியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியளித்ததற்காக கிடைத்த வருமானத்தை விவசாயத்தில் முதலீடு செய்தார். இன்றும் கூட பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் அசைக்க முடியாத ஒரு வீராங்கனையாகக் கருதப்படுகிறார் கமீலியா.

அந்தக் காலத்தில் கமீலியா என்றால், இந்தக் காலத்தில் சப்ரினா என்று சொல்லுமளவுக்கு பெண்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் கலக்கிவருகிறார். இத்தனைக்கும் சப்ரினாவின் வயது 17தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் ரொமானியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதே சப்ரினாதான். ரொமானியாவில் பிறந்து, வளர்ந்தவர் சப்ரினா. அம்மாதான் சப்ரினாவின் பயிற்சியாளர். சப்ரினாவுக்கு நான்கு வயதாக இருந்தபோது தன்னுடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கூடத்துக்கு அழைத்துச் செல்வது அவரது அம்மாவின் வழக்கம்.தினமும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளைப் பார்த்த சப்ரினாவுக்கு இயல்பாகவே ஜிம்னாஸ்டிக்ஸின் மீது ஆர்வம் பிறந்தது. சப்ரினாவுக்கு ஐந்து வயதானபோது, அவரது அம்மாவே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அம்மாவின் திறமையான பயிற்சியின் காரணமாக, தனது பத்து வயதிலேயே ரொமானியாவின் பெண்களுக்கான தேசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம்பிடித்துவிட்டார் சப்ரினா. 2022ம் வருடத்தில் ஜெசோலா கோப்பைக்கான போட்டியில் ரொமானியா பெண்கள் அணி சார்பாக கலந்துகொண்டார் சப்ரினா. இவரது திறமையான ஜிம்னாஸ்டிக்ஸ் காரணமாக ரொமானியா நான்காம் இடத்தைப் பிடித்தது.அதில் தனிநபர் பிரிவில் சப்ரினா வெண்கலப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார். ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதே வருடத்தில் ஐரோப்பியன் யூத் சம்மர் ஒலிம்பிக் ஃபெஸ்டிவல் போட்டியில் ரொமானியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார்.

“அம்மாவின் வழிகாட்டலும், பயிற்சியும்தான் பதக்கம் வெல்ல காரணம்…” என்கிறார் சப்ரினா. மட்டுமல்ல, 2022ல் நடந்த ஜூனியர் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்ஸில் ரொமானியாவுக்காக வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதில் வால்ட் ஜிம்னாஸ்டிக்ஸில் தங்கத்தையும், ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் வெண்கலத்தையும் தன்வசமாக்கினார். அப்போது சப்ரினாவின் வயது 15தான்.பதினாறு வயதிலேயே சர்வதேச அளவிலான சீனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றுவிட்டார். 2023 மார்ச் மாதத்தில் நடந்த டோகா உலகக் கோப்பையில் கம்பிகளின் மீதான ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார். இதே வருடத்தில் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு, ரொமானியா அணி வால்ட் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடிக்கவும், ஃப்ளோர் பிரிவில் வெண்கலம் வெல்லவும் காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் ரொமானியா பெண்கள் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி ஏழாவது இடத்தைப் பிடிக்க முக்கிய காரணமானவர், சப்ரினாதான். இளம் வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸில் சப்ரினா பல சாதனைகளைச் செய்வதற்கு மூல காரணமே அவரது அம்மா கொடுக்கும் பயிற்சிதான். கமீலியாதான் சப்ரினாவின் அம்மா!
– த. சக்திவேல்

 

The post ஜிம்னாஸ்டிக்ஸ் ராணிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article