ஏ.ஐ.தொழில்நுட்பம் பல புரட்சிகளை செய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கார்ட்டூன்கள் பரவலாக பரவி வருகின்றன. தங்கள் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கார்ட்டூன்களாக மாற்றி பதிவிட்டு வருகின்றனர். இந்த கார்ட்டூன்களை ஜிப்லி ஆர்ட் என்று அழைக்கிறார்கள். தற்போது இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு பலர் கூடி பார்க்கும் வேலையை ஏஐ செய்துவிடுகிறது. அதற்கு தகுந்தாற்போல் பல பணிகளை பல கலைஞர்கள், நிபுணர்கள் வியக்கும் அளவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் செய்து அசத்தி வருகிறது.
அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு கால்பதித்து முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் வேலை வாய்ப்புகளும் குறையக்கூடும் என்ற நிைல உருவாகியுள்ளது. ஜப்பானில் ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் 40 ஆண்டுக்கு முன்பு முதலில் இந்த ஜிப்லி அனிமேஷன் உருவாக்கப்பட்டது. இவர்கள் ஜப்பான் நாட்டு மக்களின் வாழ்வியல், கலை படைப்புகளை ரசனை மாறாமல் ஜிப்லி சித்திரத்தில் வழங்கி வரவேற்பை பெற்றனர். இதை தான் தற்போது சாட் ஜிபிடி சாட்பாட்டில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கி வருகிறார்கள்.
சாட் ஜிபிடியில் தங்கள் புகைப்படத்தை பதிவு செய்து அதை அனிமேஷன் பாணியில் ஜிப்லி கார்ட்டூன்களாக உருவாக்கி பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபலங்கள் தனது ஜிப்லி படத்தை பதிவிட்டிருந்தனர். இந்த ஜிப்லி அனிமேஷனை பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஜிப்லி புகைப்படங்களை மக்கள் அனைவருமே சமூக வலைதளத்தில் பயன்படுத்த தொடங்கினால் சாட் ஜிபிடியின் பணிச்சுமை அதிகமாகும். இதனால் கிராபிக்ஸ் கார்டுகள் அதிகம் சூடாகி உருகும் நிலையில் இருப்பதாக ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த செயல்பாட்டை இன்னும் மேம்பட்ட முறையில் அறிமுகப்படுத்தும் வரை மக்கள் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதே சமயம் இந்த ஜிப்லி தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல கலைஞர்களின் கலைப்படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதைக்கு இதற்கான உரிமை மற்றும் விதிமுறைகள் எதுவும் சட்டமாக்கப்படவில்லை.
மேலும் கதை, கவிதைகளுக்கு தேவையான சித்திரங்களை சுயமாக உருவாக்கி கொள்ள முடியும். தற்போது டிஜிட்டல் புத்தகங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிப்லி சித்திரத்துடன் இனி டிஜிட்டல் புத்தகங்கள் வெளியாகும். இதனால் புதிய எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாவார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கொண்டால் முன்னேற்றம் காணலாம். ஆனால் இதிலும் கற்பனைகள், புனைவுகள், போலி செய்திகள் என்று பரவுவதை தடுக்க முடியாது.
எனவே, மக்கள் தங்கள் சுயபுத்தியை நன்றாக பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் உண்மையா, பொய்யா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறும் விமர்சனங்கள், தனி மனித தாக்குதல் ஆகியவற்றால் வழக்குகள் பெருகும். வழக்கம் போல் காவல் துறை உட்பட அனைவருக்குமே இது சவாலாகவே அமையும் என்பதால் எதிர்காலத்தில் சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகளை அரசு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
The post ஜிப்லி டிரெண்டிங் appeared first on Dinakaran.