ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு பழைய கார்களின் விற்பனை வரி உயர்வு: பாப்கார்னுக்கு 18% வரி விதிப்பு; காப்பீடு வரி குறைப்பு முடிவு ஒத்திவைப்பு

4 weeks ago 7

ஜெய்சல்மார்: பாப்கார்னுக்கு 18 சதவீத வரி விதிக்கவும், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வரியை 18 சதவீதமாக அதிகரிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், மருத்துவ, ஆயுள் காப்பீட்டிற்கான ஜிஎஸ்டி குறைப்பது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி வசூலை அதிகரிக்கும் நடவடிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. அனைத்து பொருட்களுக்கும் 5%, 12%, 18%, 24% என்ற சதவீதத்தில் பிரித்து ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதில் தேவையான மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி முடிவுகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதி செயலாளர்கள் பங்கேற்றனர். முந்தைய ஜிஎஸ்டி கூட்டத்தில், மருத்துவ, ஆயுள் காப்பீடுகளின் பிரீமியம்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுவதை குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுக்க பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கூடி ஆலோசனை நடத்தி, ஆயுள் காப்பீடு மற்றும் முதியோர் மருத்துவ காப்பீடுக்கான பிரிமீயம்களை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரைத்தது. எனவே இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவில் சில உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், காப்பீடுகளுக்கான வரி குறைப்பு குறித்து முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர்கள் குழுவின் தலைவர் சாம்ராட் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த விவகாரத்தில் மேலும் ஆலோசனை நடத்தப்பட வேண்டுமென குழுவில் சில உறுப்பினர்கள் விரும்புகின்றனர். எனவே ஜனவரியில் நாங்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம்’’ என்றார். மேலும், விமானத்திற்கான எரிபொருளை (ஏடிஎப்) ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கவுன்சில் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே பல ஆண்டாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நேற்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* உப்பு மற்றும் மசாலாக்கள் கலந்த சாப்பிடுவதற்கு தயாரான பேக்கிங் செய்யப்படாத பாப்கார்ன்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுவே பேக்கிங் செய்யப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும், இனிப்பு கலந்த கேரமல் பாப்கார்ன்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இனி தியேட்டர்களில் பாப்கார்ன் விலை மேலும் அதிகரிக்கும்.
* இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசிகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* ஜல்லி கொண்டு தயாரிக்கப்படும் வீடு கட்டுவதற்கான ஏஏசி கற்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* பயன்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கார்களின் விலை அதிகரிக்கும்.
* ஜீன் மருத்துவ தெரபிக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு.
* கடன்தாரர்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராத கட்டணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.

* வரி மாற்றம் குறித்த ஆலோசனை இல்லை
அத்தியவாசிய பொருட்கள் உட்பட 148 பொருட்கள் மீதான வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டுமென அமைச்சர்கள் குழு கடந்த மாதம் பரிந்துரைத்து இருந்தது. இதில், மது, சிகரெட், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 28 சதவீதத்திற்கு பதிலாக புதிதாக 35 சதவீத வரி விகிதத்தை கொண்டு வர வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும், 20 லிட்டர் தண்ணீர் கேன் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விவகாரம் நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘‘வரி விகித மாற்றங்களுக்கான அமைச்சர்கள் குழு அதன் அறிக்கையை இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே இவ்விவகாரம் மீது முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதே போல, ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கான வரி விவகாரங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

The post ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு பழைய கார்களின் விற்பனை வரி உயர்வு: பாப்கார்னுக்கு 18% வரி விதிப்பு; காப்பீடு வரி குறைப்பு முடிவு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article