ஜார்க்கண்ட் முதல்-மந்திரியை வேட்பாளராக முன்மொழிந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்

1 week ago 5

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கடந்த தேர்தலில் பர்ஹைத் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முதல் மந்திரி ஹேமந்த் சோரன், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனுவில் அவரது பெயரை முன்மொழிந்தவர்களில் ஒருவர் மண்டல் முர்மு.

சுதந்திர போராட்ட தியாகியும், சந்தால் புரட்சிக்கு தலைமை தாங்கியவருமான சிடோ-கனுவின் குடும்பத்தைச் சேர்ந்த முர்மு, நேற்று திடீரென பா.ஜ.க.வில் இணைந்தார். தியோகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

ஹேமந்த் சோரனை தேர்தலில் போட்டியிட முன்மொழிந்த மண்டல் முர்மு, பா.ஜ.க. குடும்ப உறுப்பினர் ஆகியிருப்பதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய ஜார்க்கண்ட் அரசின் தவறான கொள்கைகளால் பழங்குடியின சமூகத்தின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளதாகவும், அதனால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பா.ஜ.க.வில் இணைகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பர்ஹைத் தொகுதியில் ஹேமந்த் சோரனை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் காம்லியேல் ஹெம்ப்ரான் போட்டியிடுகிறார்.

Read Entire Article