ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்

3 months ago 15

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்-மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதேபோல ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் காண்டே தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

Read Entire Article