ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ். தோனி நியமனம்: தேர்தல் ஆணையம்

2 months ago 10

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்-மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "தோனி தனது புகைப்படத்தை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விபரங்கள் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார். இது அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாக்காளர்களிடம் தூண்டும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது" என்றார்.

Read Entire Article