மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் காயத்தை சந்தித்த அவர் ஒரு வருடம் கழித்து குணமடைந்து இத்தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே அவர் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் தேர்வாகியுள்ளதால் சில முன்னாள் வீரர்கள் அவரது உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் முதல் போட்டியில் ஷமி விளையாடாதது அவர் 100 சதவீதம் பிட்டாக இல்லை என்பதை காண்பிப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரு போட்டி மட்டுமே முடிந்துள்ளது. 4 போட்டிகள் இருக்கின்றன. முதல் போட்டியில் ஷமி விளையாடவில்லை. அப்படியானால் அவர் 100 சதவீதம் பிட்டாக இல்லை என்பதே ஒரே அர்த்தமாகும். அதற்காக நீங்கள் சொல்லும் எந்த காரணமும் வேலையாகாது. பிட்ச் சுழலுக்கு ஒத்துழைத்தால் நீங்கள் மூன்று ஸ்பின்னர்கள் விளையாடினார்கள் என்று சொல்வீர்கள். ஆனால் அந்த காரணத்தை கொடுக்காதீர்கள். அதை விட்டுவிட்டு ஷமியை விளையாட வையுங்கள்.
அவரைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன். இன்னும் 4 போட்டிகள் இருந்தாலும் அது வேகமாக முடிந்து விடும். அந்த நான்கு போட்டிகளுக்கு பயணம் செய்வதும் பாரத்தை ஏற்படுத்தும். எப்படி இருந்தாலும் அவர் முதல் போட்டியில் விளையாடாததால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது தெரிகிறது. அது எனக்கு கொஞ்சம் கவலையை கொடுக்கும் விஷயமாக இருக்கிறது" என்று கூறினார்.