ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களின் ஒற்றுமையை உடைக்கின்றனர்: காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

6 months ago 18

கும்லா: ‘ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்கள் இடையே ஒற்றுமையை உடைக்கின்றனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஜார்க்கண்டில் முதல் கட்டமாக 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, கும்லா, போகாராவில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்திரம் பெற்றதிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் ஒற்றுமையை காங்கிரஸ் விரும்பவில்லை. அவர்களிடம் ஒற்றுமை இல்லாத வரை, காங்கிரஸ் தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து நாட்டை கொள்ளையடித்தது. இதே போல, ஜார்க்கண்டிலும் எஸ்டி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினர் ஒன்றுபட்டால் தங்களுக்கு ஆபத்து என்பதை காங்கிரஸ் நன்கு அறியும். அதனால்தான் அவர்கள் ஒற்றுமையை உடைக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

ஒவ்வொரு சமூகத்தில் உள்ளவர்களையே எதிர் எதிராக தூண்டிவிடுகின்றனர். யாதவுக்கு எதிராக குர்மி மக்களையும், சோனார் மக்களுக்கு எதிராக லோகர் பிரிவினரையும் தேர்தலில் நிறுத்துவதன் மூலம் ஓபிசியின் ஒற்றுமையை சீர்குலைக்க விரும்புகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் எந்த அளவிற்கும் செல்வார்கள். அவர்களின் தீய திட்டங்கள், சதித்திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கு காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி ஜார்க்கண்டின் கனிமங்கள், காடுகள், மணல் மற்றும் நிலக்கரி போன்ற வளங்களை சூறையாடுகின்றன. உங்கள் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்து தங்களின் வாக்கு வங்கிக்கு தர முயற்சிக்கின்றனர். இவ்வாறு குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சியில் 3 கிலோ மீட்டர் தூர பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார்.

The post ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களின் ஒற்றுமையை உடைக்கின்றனர்: காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article