பாட்னா: ஜார்கண்ட், டெல்லி பேரவை தேர்தலில் கழற்றிவிட்டதால் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக செய்திகள் வெளியான நிலையில், பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது), லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளின் கூட்டணி அரசு நடக்கிறது. அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு போன்ற விவகாரங்கள் குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முங்கரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது) தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பேசுகையில், ‘எங்களது உரிய நேரத்தில் பலத்தைக் காட்டும்.
எங்களது கட்சியை பலவீனமாகக் கருத வேண்டாம்’ என்று பேசினார். இவரது பேச்சு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஜிதன் ராம் மஞ்சியின் கட்சிக்கு ஒரு சீட் கூட கூட்டணியில் வழங்கவில்லை. அதேபோல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது கட்சிக்கு ஒரு சீட் வேண்டும் என்று பாஜகவிடம் அவர் கேட்டார். ஆனால் அங்கும் ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. அதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். அதனாலேயே உரிய நேரத்தில் (பீகார் தேர்தலின் போது) எங்களது பலத்தைக் காட்டுவோம் என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பேசியதாக கூறப்படும் வீடியோவில், ‘டெல்லி தேர்தலில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் இல்லை; ஆனால் பீகாரில் எங்களது பலத்தைக் காண்பிப்போம்.
எங்களுக்காக நாங்கள் கேட்கவில்லை; தலித்துகளின் நலனுக்காகவே சீட் கேட்கிறோம். ஒன்றிய அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டும் என்று தோன்றுகிறது. மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்; எங்களிடம் வாக்குகள் உள்ளன; பிறகு ஏன் எங்களுக்கு சீட் கொடுக்கவில்லை?’ என்று அவர் பேசுவது போன்ற வீடியோக்கள் வைரலாகின்றன. மேற்கண்ட வீடியோக்கள் இந்தி செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பப் படுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மஞ்சி விலக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற செய்திகளால் அதிர்ச்சியடைந்த ஜிதன் ராம் மஞ்சி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சில சமூக வலைதளங்களும், செய்தி சேனல்களும் நான் ஒன்றிய அமைச்சரவையில் இருந்து வெளியேற உள்ளதாக தவறான செய்தியை பரப்பியும் ஒளிபரப்பியும் வருகின்றன. நான் சாகும் வரை பிரதமர் மோடியை கைவிட மாட்டேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாட்டின் நலனுக்காகவும் பீகார் நலனுக்காகவும் ஒன்றுமையாக பாடுபடுகிறோம். ஆனால் சில ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்றப்படி எங்களைப் பிரிக்க முயற்சிக்கின்றன. எனவே இதுபோன்ற நபர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்’ என்றார்.
The post ஜார்கண்ட், டெல்லி தேர்தலில் கழற்றிவிட்டதால் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி பதவி விலகுகிறாரா?: பீகார் அரசியலில் புயலை கிளப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.