
ராஞ்சி,
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி வெளியான தகவலின்படி, நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது.
இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் கூறப்படுகிறது. இதில் சரக்கு ரெயில்களில் ஒன்றில் தீப்பிடித்து கொண்டது. இதனால் மீட்பு பணி அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. விபத்தில், 5 ரெயில்வே ஊழியர்கள் வரை காயமடைந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.