திருச்சி: திருச்சி மாவட்ட போலீசார் திருச்சி, சிறுகனூர் அகரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஜெகன்(எ)கொம்பன் ஜெகனையும், ஜூலை 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்த திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரையை புதுக்கோட்டை போலீசாரும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், திருச்சி, புதுக்கோட்டை எஸ்பி தம்பதி வருண்குமார், வந்திதா பாண்டே மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பது, ஆபாசமாக திட்டுவது உள்ளிட்ட தொல்லைகள் அதிகரித்தன.
இதுகுறித்து, திருச்சி எஸ்பி வருண்குமார் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக, விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன்(48) மற்றும் அதே கட்சி உறுப்பினரான திருப்பதி(33) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான இருவரும் நிபந்தனை ஜாமீன் பெற்று திருச்சி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தங்கி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில், இருவரில் ஒருவரான திருப்பதி, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, வக்கீல் அளித்த புகாரின் பேரில் போலீசார், அவர்மீது வழக்குப்பதிந்து, நாதக கட்சி அலுவலகத்தில் இருந்த திருப்பதியை(35) நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தது.
The post ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.