சென்னை விமானநிலையத்தில் பயணிகள் ‘டிஜியாத்ரா’ பயன்படுத்த உதவியாளர்கள் 100 பேர் நியமனம்

5 hours ago 2

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் டிஜியாத்ரா மூலம் பயணிகள் தானியங்கி கருவிகளை பயன்படுத்துவதற்கு உதவும் வகையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக 100 பேர் உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பயணிகள் எவ்வித தாமதமின்றி விமான பயணங்களை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் காகித ஆவணங்கள் இன்றி, தானியங்கி கருவிகளில் தங்களின் முக அடையாளங்களை பயணிகள் காட்டி, டிஜியாத்ரா முறையில் உள்ளே சென்று, விமானங்களில் ஏறும் முறை ஏற்கெனவே டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், வாரணாசி, புனே, விஜயவாடா உள்பட பல்வேறு உள்நாட்டு விமானநிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் டெர்மினல்கள் 1, 4ல் டிஜியாத்ரா தானியங்கி கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது.

இதை பயன்படுத்த பயணிகள் சிரமப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா வழியில் செல்லும் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக, டிஜியாத்ரா சிஸ்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற, ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 100 பேரை இந்திய விமானநிலைய ஆணையம் பணி நியமனம் செய்துள்ளது.

இவர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பணியாற்றி, டிஜியாத்ரா சிறப்பு வழியில் விமானநிலையத்துக்குள் செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கு பெரிதும் உதவி வருகின்றனர். இத்திட்டம் தற்போது சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் டிஜியாத்ரா சிறப்பு வழியில் வரும் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி உள்ளே சென்று விமானங்களில் பயணித்து வருகின்றனர்.

The post சென்னை விமானநிலையத்தில் பயணிகள் ‘டிஜியாத்ரா’ பயன்படுத்த உதவியாளர்கள் 100 பேர் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article