ஜாதி வன்கொடுமை? மாணவருக்கு வெட்டு: 3 பேர் கைது

3 months ago 6

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலப்பிடாவூரை சேர்ந்த ராமன் மனைவி செல்லம்மாள். இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் அய்யாச்சாமி, சிவகங்கை அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உறவினர் பொன்முத்து என்பவரை, தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு மேலப்பிடாவூருக்கு வந்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே வந்த முதியவரை, ‘பார்த்து போங்க’ என அய்யாச்சாமி கூறியுள்ளார். இதில், வாக்குவாதம் ஏற்பட்டதில் மேலப்பிடாவூரை சேர்ந்த செல்லச்சாமி மகன் வினோத்குமார் (20), அரியசாமி மகன் ஆதீஸ்வரன் (23), வல்லரசு ஆகியோர், அய்யாச்சாமியை ஜாதியை சொல்லி அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். காயமடைந்த அய்யாச்சாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து அய்யாச்சாமியின் சகோதரர் கூறுகையில், ‘‘கல்லூரி சென்றுவிட்டு புல்லட்டில் ஊர் திரும்பிய தம்பியை, பட்டியல் சாதி நீ… புல்லட் ஓட்டுவியா எனக் கூறி வினோத், ஆதிஸ்வரன், வல்லரசு ஆகியோர் கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிய தம்பி, எனக்கு போன் செய்ததும் நான் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆத்திரம் அடைந்த அவர்கள் எனது வீட்டுக்கு வந்து வீட்டையும் அடித்து உடைத்துள்ளனர்’’ என்றார்.

* போலீஸ் விளக்கம்
சிவகங்கை மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இந்த சம்பவத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கைகள் வெட்டித் துண்டாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொதுமக்களுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கவும் இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஜாதி வன்கொடுமை? மாணவருக்கு வெட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article