ஜம்மு: ஜம்முவில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கடைகள் இடிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு நகரில் முத்தி கேம்ப் பகுதியில் காஷ்மீரி பண்டிட்டுகள் கடைகளை வைத்துள்ளனர். இவர்கள் கடந்த 30 வருடங்களாக கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,பண்டிட்டுகள் வைத்துள்ள கடைகள் ஜம்மு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அரசு அதிகாரிகள் நேற்று முன்தினம் கடைகளை இடித்தனர்.
இதை கண்டிது காஷ்மீரி பண்டிட்டுகள் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடை உரிமையாளர் குல்தீப் கிஸ்ரோ,‘‘ எங்களுக்கு வாழ்க்கையில் உதவி அளிப்பதற்கு பதிலாக அரசு எங்களது கடைகளை இடிக்கிறது என்றார். ஜவாஹிர் லால்,‘‘ கடைகள் இடிப்பு காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்பட்ட தாக்குலாகும்.
கடைகளை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். பிடிபி,பாஜ உள்ளிட்ட கட்சிகள் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவுவதற்கு முதல்வர் உமர் அப்துல்லா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
The post ஜம்முவில் காஷ்மீரி பண்டிட்டுகளின் கடைகள் இடிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.