
ஸ்ரீநகர்,
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள அவர்களது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இத்தகைய பதற்ற சூழலில், ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
நேற்று இந்திய வான் எல்லையில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வான் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ள இடங்களில் அவ்வப்போது சைரன்கள் ஒலிக்கப்பட்டு உஷார்படுத்தப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயராக உள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் அத்துமீறலால் தற்போது ஸ்ரீநகர் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, ஜம்முவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.