காந்திநகர்,
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ராஷ்ட்ரீய ஏக்தா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நர்மதா நதிக்கரையில் உள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
தேசிய ஒருமைப்பாடு தினத்தை ஒருபுறமும், தீபாவளி பண்டிகையை மறுபுறமும் கொண்டாடி வருகின்றோம். தீபாவளி பண்டிகை முழு நாட்டையும் விளக்குகள் மூலம் இணைத்து ஒளிரச் செய்கிறது. பல நாடுகள் தீபாவளியை தேசிய பண்டிகையாக கொண்டாடுகின்றனர், இந்தியாவை உலகத்துடன் இணைத்துள்ளது.
தேசிய ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு, அரசின் ஒவ்வொரு பணியிலும் பிரதிபளிக்கிறது. இன்று நாம் அனைவரின் தேச அடையாளமாக ஆதாரின் வெற்றியைப் பார்க்கிறோம், உலகமும் அதைப் பற்றி விவாதிக்கிறது. இந்தியாவில் பல்வேறு வரி முறைகள் இருந்தன, ஆனால் நாங்கள், ஜிஎஸ்டி என்ற ஒரே நாடு ஒரே வரி முறையை உருவாக்கினோம்.
மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும். இந்த தேர்தல் முன்மொழிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் ஏழைகளுக்கு கிடைக்கும் வசதிகளை ஒருங்கிணைத்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரே நாடு ஒரே மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்கியுள்ளோம். இன்று மதசார்பற்ற பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இன்று முழு நாடும் மகிழ்ச்சியடைந்துள்ளது. இது சர்தார் வல்லபபாய் படேலுக்கு நான் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி.
கடந்த 70 ஆண்டுகளாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரை உச்சரிப்பவர்கள், அதை மிகவும் அவமதித்துள்ளனர். காரணம் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370. அந்தச் சட்டம் நிரந்தரமாக புதைக்கப்பட்டுவிட்டது.
முதல்முறையாக அங்கு சட்டசபை தேர்தல் அங்கு பாரபட்சமின்றி நடந்துள்ளது. முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இந்த காட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மனநிறைவை அளித்திக்கும். இதுவே நமது அஞ்சலி. ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நிராகரித்து, இந்தியாவின் ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
நாடு வளர்ந்து வருவதால் உலக நாடுகள் இந்தியாவை நோக்கி நெருங்கி வருகின்றன. இது சாதாரணமானதல்ல, புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தனது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே நாம் நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும் நகர்ப்புற நக்சல்கள் சாதியை வைத்து நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கின்றனர். ஒற்றுமையாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்க முடியும் என்று வலியுறுத்துபவர்களை நகர்ப்புற நக்சல்கள் குறிவைக்கின்றனர். நகர்ப்புற நக்சல்களை மக்கள் தான் அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை கிழித்தெறிய வேண்டும், என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.