*உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம்
நெல்லை : ஜமைக்கா நாட்டில் துப்பாக்கி சூட்டில் பலியான மகனின் முகத்தை 2 மாதங்களாகியும் பார்க்க முடியாமல் நெல்லையில் உள்ள தாயார் தவித்து வருகிறார். அவரது உடலை இங்கு கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாயின் கோரிக்கையாக உள்ளது.
வட அமெரிக்க நாடான ஜமைக்கா நாட்டில் சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு, மீனாட்சி புரம், புளியந்தோப்பு நடுத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஷ் (31) ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அவருடன் நெல்லையைச் சேர்ந்த மேலும் 3 பேர் வேலை செய்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர்.
அவர்கள் துப்பாக்கியால் மிரட்டி அங்குள்ளவர்களிடம் பணம் பறித்தனர். அசைந்தவர்கள், ஓடியவர்களை அந்த கும்பல் சரமாரியாக சுட்டு வீழ்த்திவிட்டு தப்பியோடியது. இதில் விக்னேஷ் துப்பாக்கிச்சூட்டில் குண்டு அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான சுபாஷ் அமிர்தராஜ் விக்னேஷின் பெற்றோரை ெதாடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். விக்னேஷின் உடல் ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் வசம் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகள் நிறைவுபெற்று உடல் நெல்லை வந்து சேர 10 நாட்களுக்கு மேல் ஆகும் என அப்போது கூறப்பட்டது.
விக்னேஷின் உறவினர்கள் உடலை விரைந்து அனுப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்தனர். நெல்லையில் உள்ள அரசியல் கட்சிகளும் இதற்காக கலெக்டரிடம் மனு அளித்தன.
இறந்த விக்னேஷின் உடலை ஜமைக்காவிலிருந்து அமெரிக்கா வழியாக இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறைகளில் இறங்கி இருக்கும் தனியார் ஏஜென்சி, தங்களுக்குரிய முழு கட்டணத்தையும் செலுத்தினால்தான் அங்கிருந்து உடலை அனுப்ப முடியும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்திய தூதரகத்தின் தாமத நடவடிக்கைகளால் இறந்த விக்னேஷின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
விக்னேஷ் வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம், தனியார் ஏஜென்சி குறிப்பிடும் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும், விக்னேஷின் உறவினர்களே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் விக்னேஷின் உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில் நெல்லைக்கு வந்த தமிழக முதல்வரிடமும் இதுகுறித்து விக்னேஷின் பெற்றோர் மனு அளித்தனர்.
இந்நிலையில் தனது மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என தாயார் பொன்னம்மாள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளார். விக்னேஷின் தங்கை ருக்குமணியும், மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து கேட்டுக் கொண்டு வருகிறார்.
இதுகுறித்து விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், ‘‘ஜமைக்கா நாட்டில் இருந்து விக்னேஷின் உடலை இங்கு கொண்டு வர ரூ.25 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. விக்னேஷின் குடும்பத்தினர் இவ்வளவு பணம் செலவழிக்கும் நிலையில் இல்லை. ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு உடலை எடுத்துச் செல்ல உலக சுகாதார மையம் விதிகளின்படி பேக்கிங் செய்ய வேண்டும்.
அதற்கு முன்னதாக மருத்துவச் சான்று, போலீஸ் மற்றும் தூதரகத்தின் தடையில்லா சான்று, உடலை எடுத்துச் செல்பவர், பெறுவோர் குறித்த விபரங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்தால் மட்டுமே பதப்படுத்தப்பட்ட உடல் பேக்கிங் செய்யப்படும். இதில் சில தாமதங்கள் காரணமாக விக்னேஷின் உடலை இங்கு கொண்டு வர முடியவில்லை. இந்திய தூதரகமும் தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறையும் விரைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
The post ஜமைக்கா நாட்டில் துப்பாக்கி சூட்டில் இறந்த மகனின் முகத்தை 2 மாதமாகியும் பார்க்க முடியாமல் தவிக்கும் தாயார் appeared first on Dinakaran.