பெருமாள் வடிவில் பூமாலை
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் புறப்பாடாவார். ஆனால், மாலையில் வாசனை மிகுந்த ஒரு பூமாலையை மட்டும் மேளதாளத்துடன் புறப்படச் செய்கின்றனர். பெருமாளே மாலை வடிவில் பவனி வருவதாக ஐதீகம். ராமானுஜர் அவதரித்த தலம். இங்கு தீபாவளி துவங்கி தை மாத ஹஸ்த நட்சத்திரம் வரையில் ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகமே நடைபெறுகிறது.
பெருமாள் கோயிலில் பிரதோஷம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள்குன்றம் என்ற இடத்தில் சிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இந்த நரசிம்ம மூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால் நந்தி தேவருடன் சிவபெருமானை வழிபடும் பிரதோஷ தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
கொடி மரத்தில் ஆமை
பொதுவாக பெருமாள் கோயில் கொடி மரங்களின் உச்சியில் கருடனை அமைப்பது வழக்கம். ஆனால் நாகர்கோவில் நாகராஜா கோயில் சந்நதியின் வலதுபுறமுள்ள அனந்தகிருஷ்ணன் சந்நதியில் உள்ள கொடி மரத்தில் கருடனுக்குப் பதில் ஆமை உள்ளது. பாம்புக்கு கருடன் பகை. இந்த கோயில் நாகத்திற்கான கோயில் என்பதால் கருடனுக்குப் பதில் ஆமை இருப்பதாக கூறப்படுகிறது.
சொர்க்க வாசல் திறக்காத கோயில்
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள், தனது கோயிலில் சொர்க்க வாசலை கடப்பது வழக்கம். ஆனால், திருச்சி உறையூர் கமலவல்லி தாயார் கோயிலில், மாசி ஏகாதசியன்றுதான் தாயார் சொர்க்க வாசல் கடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதில்லை.
ஜன்னல் தத்துவம்
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் அமைந்துள்ளது பங்காருதிருப்பதி கோயில். இங்கு மூலவராக ஸ்ரீனிவாச பெருமாள் வீற்றிருக்கிறார். இவரை சாளரங்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஆறு சிறு ஜன்னல்கள் அந்த மண்டபத்தைச் சுற்றி அமைந்துள்ளன. காமம், குரோதம் முதலிய ஆறு தீய குணங்களை விடுத்து, இறைவனை தரிசித்தால் மோட்சம் கிட்டும் என்பதுதான், இந்த ஆறு ஜன்னல் தரிசனத்தின் தத்துவம் ஆகும்.
பெருமாள் சந்நதியில் சிவலிங்கம்
கம்பம் அருகே உள்ள சுருளி பூதநாராயண பெருமாள் கோயிலில், பெருமாள் சந்நதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி-குங்குமமும் தருகிறார்கள், சடாரி ஆசீர்வாதமும் செய்கிறார்கள்; உச்சிக்கால பூஜையின் போது துளசி தீர்த்தமும் தருகிறார்கள். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிகார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் திகழ்கின்றனர்.
பெருமாள் அருகில் சைவ முனிவர்
பொதுவாக நடராஜப் பெருமானின் அருகே காட்சியளிக்கும் வியாக்ரபாத முனிவர், சிறுபுலியூரில், பெருமாள் அருகில் தரிசனமளிக்கிறார்! இந்த சைவ முனிவர் வைணவ தெய்வத்துடன் சேர்ந்தது எப்படி? புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதர் முக்தி வேண்டி, தில்லை நடராஜனை வெகுகாலம் தவம் செய்தார். ஈசனோ அவரை சிறுபுலியூர் பெருமாளை வணங்குமாறு ஆணையிட்டார். அதன்படி வியாக்ரபாதர் செய்ய, பெருமாள் அவருக்கு முக்தியை அருளினார். இதுதான் காரணம். புலிக்கால் முனிவர் வழிபட்டதாலேயே, இத்தலம் சிறு-பேரளம் பாதையில் கொல்லுமாங்குடியில் இறங்கி இக்கோயிலை அடையலாம்.
The post ஜன்னல் தத்துவம், கொடி மரத்தில் ஆமை : அபூர்வ தகவல்கள் appeared first on Dinakaran.