ஜனாதிபதி அரசியலமைப்புக்கு மேலானவர் அல்ல வக்பு சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

21 hours ago 5

ராணிப்பேட்டை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, ராணிப்பேட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு வக்பு சட்டத்திருத்த மசோதாவின் மூலம் சட்டத்தின் பெயரால் வக்பு சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோல வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மற்ற எந்த மதத்திலும் தலையிடாத ஒன்றிய அரசு குறிப்பாக இஸ்லாமிய மதத்தை மட்டும் குறிவைத்து அநீதி இழைக்கிறது.

வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால், மதக்கலவரங்கள் மூலம் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. ஜனாதிபதி சரியான நேரத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளது. ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திற்கு மேலானவராக இருக்கலாம். ஆனால் அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலானவர் அல்ல. அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் அதனை உச்சநீதிமன்றம் சரியான முறையில் கையாண்டு அரசியலமைப்பு சட்டத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* பாமக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
ராணிப்பேட்டையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை செல்லும்போது, அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை பகுதியில் தனது வாகனத்துக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அங்கு அவரை சந்தித்த ராணிப்பேட்டை மாவட்ட பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், சால்வை அணிவித்து மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

The post ஜனாதிபதி அரசியலமைப்புக்கு மேலானவர் அல்ல வக்பு சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article