ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

6 hours ago 2

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியான தனது எட்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த வழக்கத்துக்கு இணங்க, ஜனவரி 31-ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவதன் மூலம் கூட்டத் தொடர் தொடங்கும்.

அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் முடிந்ததும் விடுமுறை விடப்பட்டு, பின்னர் இரண்டாம் பகுதி மார்ச் இரண்டாவது வாரம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவித்தன. தோராயமாக, மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை இரண்டாம் கட்டம் நடைபெறும் என தெரிகிறது. கூட்டத் தொடரின் முதல் கட்டத்தின்போது, குடியரசத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் கூட்டத் தொடர் முடிவடையும்.

The post ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்: பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Read Entire Article