சோதனைகளை கடக்க உதவும் சோமசுந்தர விநாயகர்

2 weeks ago 2

நெல்லை மாநகரில் தாமிரபரணி நதி பாய்ந்தோடும் அழகான பகுதிகளில் ஒன்று அருகன்குளம். இவ்வூரில் ஜடாயு மோட்சம் கொடுத்த ஜடாயு துறை மண்டபத்தின் அருகே அமைந்துள்ள திருத்தலம்தான் சோமசுந்தர விநாயகப் பெருமான்திருத்தலம். இயற்கையோடு அமையப் பெற்ற இத்திருத்தலத்தில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அருட் பாலிக்கிறார் சோமசுந்தர விநாயகர்.நெல்லை டவுனில் உள்ள ஒரு விநாயகர் சிலை இயற்கை சீற்றத்தால் சேதப்படவே அதனை கோயிலில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது என்பதற்காக, அப்பகுதி மக்கள் அந்தச் சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்து அருகன்குளம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றின் கசத்திற்குள் போட்டுவிட்டனர். (கசம் என்றால் ஆழமான பகுதி)நாட்கள் நகர்ந்த நிலையில், அந்த ஆற்றின்கரையின் இருக்கும் பிண்ட ராமர் கோயிலுக்கு வழக்கமாக அதிகாலை நீராடிவிட்டு தரிசனம் செய்ய வரும் சோமசுந்தர சிவாச்சாரியார், கனவில் சென்ற விநாயகப் பெருமான்,‘‘சோமசுந்தரம்… நான் ஆற்றுக்குள்ளே இருக்கேன், என்னை எடுத்து வெளியே கொண்டு வந்து ஆற்றங்கரையில் வைத்து என்னை பூஜை செய்து வா, உன்னையும், என்னை பூஜிக்கும் யாவரையும் நல்ல முறையில்வைப்பேன்’’. என்று கூறினார். சோமசுந்தரர் ஊருக்கு சென்று மக்களை திரட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தார்.

இவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் இறங்க விநாயகர் சிலையானது இருக்குமிடத்தின் சூழலை காண்பித்து கொடுத்தது. அதனை எடுத்து உடனேயே சோமசுந்தரர் ஆற்றங்கரையில் ஒரு அரச மரத்தடியில் அந்த விநாயகரை பிரதிஷ்டை செய்தார். சோமசுந்தரர் கையினால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால்,இவ்விநாயகர் இன்று சோமசுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.போக்குவரத்து அதிகமாக இல்லாத காலகட்டத்தில், ஆற்றைக் கடந்துதான் பாளையங்கோட்டைக்கு செல்ல வேண்டும். அருகன்குளத்தைச் சேர்ந்த ஒருவர், பாளையங்கோட்டையில் இருந்து அருகன் குளம் வரும்போது அவர் கையில் நிறைய பணம் இருந்தது. அதை கண்ட திருடர்கள் அவரை கொன்றுவிட்டு அந்த பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைத்தனர்.கயவர்கள் விரட்ட, மனம் பதறிய அந்த நபர், ஆற்றில் இறங்கினார். ஆற்றுக்குள் இறங்கியவுடன் அவர் கண்ணில் தென்பட்டார் சோமசுந்தர விநாயகர்.

‘‘ஐந்து கரத்தோனே என்னை ஆட்கொள்ளப்பா’’ என்ற அபயக் குரல் கொடுத்தார். கஜமுக நாதன் மதயானை ரூபம் கொண்டு அந்தத் திருடர்களை பயமுறுத்த, திருடர்கள் அஞ்சி ஓடினர். ஆற்றின் படித்துறையிலிருந்து வெளியே வந்த அந்த நபர், தன் கையில் இருந்த பணத்தை விநாயகர் முன்வைத்தார். உடனே அவ்வழியே வந்த சிறுவன், அந்த நபரை நோக்கி மழையில் நனைந்து இருக்கேன் எனக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுப்பா என்று கூறினான். சில நிமிடங்களில் அச்சிறுவன் அவ்விடம்விட்டு அகன்றான்.சிறுவன் வடிவில் வந்தது, சோமசுந்தரம் விநாயகர்தான் என்று எண்ணிய அந்த நபர், விநாயகப் பெருமானுக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுத்தார். இக்கோயிலில் அதிகமாக நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத் திருக்கோயில். நெல்லை சந்திப்பில் இருந்தும் தாழையூத்து சங்கர்நகரில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளன.

ஜி.ராகவேந்திரன்

The post சோதனைகளை கடக்க உதவும் சோமசுந்தர விநாயகர் appeared first on Dinakaran.

Read Entire Article