சொந்த பயன்பாட்டுக்காக நிதியை பயன்படுத்தியதாக நடவடிக்கை கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து எதிர்த்து வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

1 month ago 7

சென்னை: நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி கல்வி அறக்கட்டளையின்பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிவியல், மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் கல்லூரிகளை தொடங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்காக கடந்த 1984 ம் ஆண்டு ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த கல்வி அறக்கட்டளையின் கீழ் இயக்கும் 8க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மூலம் வருமானங்கள் அனைத்தும் ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அறக்கட்டளையின் அலுவலகம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை நடத்தி சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை உதவி ஆணையர், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பி 2011-12 மற்றும் 2016-17 ஆண்டுகளில் பெறப்பட்ட வருமான விவரங்களை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நோட்டீசுக்கு பதிலளித்த அறக்கட்டளை, கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் கட்ட செலவழிக்கப்பட்டது. சொந்த பயனுக்காக அறக்கட்டளையின் பணம் செலவளிக்கப்படவில்லை. நன்கொடை வசூலித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2024 ஆகஸ்ட் மாதம், ஸ்ரீலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை பதிவை வருமான வரித்துறை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை தரப்பில் அதன் நிர்வாகி ஸ்ரீநிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கல்லூரிக்கு நன்கொடை வசூலித்தாகவோ, நிதியை தவறாக பயன்படுத்தியதாகவோ, சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமே நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்ததால், கல்லூரிகள் செயல்பட முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வருமான வரித் துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சொந்த பயன்பாட்டுக்காக நிதியை பயன்படுத்தியதாக நடவடிக்கை கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து எதிர்த்து வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article