சொந்த நாடு இல்லைன்னா என்ன? சுயதொழில் இருக்கு!

2 months ago 13

சொந்த நாடு, குடியுரிமை, சீரான வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, போதுமான சுதந்திரம் இவையனைத்தும் கிடைத்துக் கூட நம்மில் பலருக்கு ஒரு எளிமையான வீடு , நல்ல வருவாய், குடும்பத்தின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவே முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் வாழ்வாதாரமும் இல்லாமல் குடியுரிமையும் இல்லாமல் போர்க்கள சூழலில் இருந்து உயிர் பிழைத்து வந்து இங்கே தனக்கென ஒரு வாழ்க்கையும் உடன் சுயமாக ஒரு தொழிலையும் உருவாக்கி இன்னமும் நிலையான வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார் சிந்துஜா குணசீலன். ரூ. 400 முதல் ரூ. 4000 வரையிலும் இவரது கைவண்ணங்களில் ஆரி வேலைப்பாடுகள் ஜொலிக்கின்றன. மனதில் அத்தனை கலவரங்களும் ஆற்றாமையும் இருப்பினும் எந்த புலம்பலோ , வருத்தமோ இல்லாமல் அத்தனை நேர்மறை எண்ணங்களுடன் பேசுகிறார்.

எனக்கு சொந்த ஊர் இலங்கை , ஏலாலை. 1998 அப்போ எனக்கு நாலரை வயசு. இங்கே இந்தியாவுக்கு வந்தோம். என் அம்மா தான் எங்களை கூட்டிட்டு வந்தாங்க. பெரிய போர் , போராடி, உயிருக்கே பயந்து என்னையும் என் அண்ணனையும் எப்படியாவது காப்பாத்தனும் என நினைச்சு இங்கே ஓடி வந்திருக்காங்க. இதிலே நாங்க விமானத்தில் வந்தவர்கள், அதனால் அகதிகள் கேம்ப்ல தங்க முடியாது. அதனால் கேம்ப் அகதிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது. அது முன்பே நாங்களும் விசாரிக்காமல் விட்டுட்டோம். இப்போ தகுந்த குடியுரிமையும் இல்லை, போதுமான வருமானமும் இல்லாம ரொம்ப கஷ்டப் படறோம் . நாங்களும் மத்தவங்க பேச்சக் கேட்டுட்டு அமைதியா இருந்திட்டோம். முன்பே முயற்சி செய்திருந்தா இன்னும் கொஞ்சம் சலுகைகள் கிடைச்சிருக்கும்’ சொல்லும் போதே கண்கள் கலங்குகிறார் சிந்துஜா குணசீலன்.

‘இங்கே இந்தியாவில் தான் படிப்பு, எம். காம் முடிச்சேன். படிச்ச படிப்புக்கு ஒரு வேலையாக கொரோனா பிரச்னைக்கு முன்பு வரைக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். இப்போ சென்னை , கீழ்கட்டளை தான் . தொடர்ந்து கொரோனா பிரச்னையில் என் வேலை போயிடுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு மன அழுத்தத்துக்கு போயிட்டேன் , அந்த நேரம் தான் ஆரி வொர்க் பயிற்சி கிடைச்சது.எனக்கு தெரிஞ்ச அக்கா ஆல்கா,அவங்க ஒரு 50 பேருக்கு கிளாஸ் எடுத்தாங்க. தொடர்ந்து என் கூட படிச்ச சீனியர் அக்கா ஆரி வொர்க்லேயே அட்வான்ஸ் கோர்ஸ் எடுத்தாங்க. அதுதான் இன்னைக்கு பெரிய சப்போட்டா இருக்கு’ ஆரி வேலைகள் அவ்வளவு சுலபமாக இருக்காது என்கிறார் சிந்துஜா.

‘ஒரு சிலர் வெறும் புட்டா போட்டுக் கேட்பாங்க. சிலர் முழு வேலைப்பாடுகள் செய்து கேட்பாங்க. வேலைக்கேத்த மாதிரி பணம் வாங்குவேன். சிலர் புடவையின் டிசைன் அப்படியே பிளவுசில் கேட்பாங்க. சிலர் ஸ்பெஷல் தீம் , கடவுள்கள், இப்படிக் கேட்கறதுண்டு. அவசரமாக டெலிவரி கேட்டாலும் சார்ஜ் அதிகமா ஆகும். காரணம் ஆரி வேலை செய்பவர்களுக்கு பொதுவா கழுத்து, இடுப்பு வலி, இரத்த அழுத்தம், கண் பிரச்னை எல்லாமே வரும் எனக்கும் இருக்கு. முதுகு தண்டு அப்படி வலிக்கும் ஆனால் ஏதாவது செய்தால் தானே சாப்பாடு. அதனால் தொடர்ந்து ஓடிட்டு இருக்கேன் ‘என்னும் சிந்துஜா UNHCR – அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் ( United Nations High Commissioner for Refugees (UNHCR)) அமைப்பு அரசுடன் சேர்ந்து பல உதவிகளும், சலுகைகள் செய்து வருகிறார்கள் என்கிறார்.

‘UNHCR இப்போ வரைக்கும் எங்களுக்காக பல உதவிகளும் செய்திட்டு இருக்காங்க. அம்மா, அப்பா இலங்கை அகதி, ஆனால் குழந்தை இங்கே பிறந்து, இங்கேயே இருக்க விரும்பும் போதும் அவங்களுக்கு குடியுரிமை கிடைக்காமல் இருக்கு. இதனாலேயே பல இடங்களில் வேலை உண்டு ஆனால் உயர் பதவிகள் கிடையாது அல்லது இந்தியர்களுக்கு கிடைக்கும் சம்பளம் கிடையாது. இப்படியான நிறைய பிரச்னை இருக்கு. ஒருவேளை ஏதோ ஒரு இயற்கை பிரச்னை காரணமா வேலை போனால் கூட இங்கேயே வாழும் இந்தியர்களுக்கு தான் திரும்ப வேலை கிடைக்கும். எங்களை திரும்ப கூப்பிட மாட்டாங்க. லோன் கிடையாது, பேங்க் அக்கவுண்ட் கிடையாது. ஆதார் இல்லை. அங்கேயும் போக முடியாமல் இங்கேயே நிலையான வாழ்க்கை இல்லாம இருக்கோம். ஆனாலும் கைத்தொழில் இருக்கு அதைக் கொண்டு முன்னேறி வர்றோம் தன்னம்பிக்கையுடன் சொல்கிறார்
சிந்துஜா குணசீலன்.
– ஷாலினி நியூட்டன்

The post சொந்த நாடு இல்லைன்னா என்ன? சுயதொழில் இருக்கு! appeared first on Dinakaran.

Read Entire Article