சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

3 months ago 27

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உள்ளாட்சி அமைப்புகள் ஆறு விழுக்காடு சொத்து வரி உயர்த்துவதற்கான அனுமதியை அரசிடம் கோரியதாக வெளியான செய்தி அறிந்தவுடன், இதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் கோரிக்கையினை நிராகரிக்க வேண்டுமென்று 17-09-2024 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இருப்பினும், இதற்கு தி.மு.க. அரசு அனுமதி அளித்துள்ளதன் விளைவாக, இது தொடர்பான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.

இதேபோன்று பிற உள்ளாட்சி அமைப்புகளும் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும். தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. இந்த சொத்து வரி உயர்வின் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, சொத்து வரி உயர்வின் காரணமாக வாடகைக்கு இருப்போரும் கூடுதல் வாடகையினை செலுத்த நேரிடும். இது மட்டுமல்லாமல், குடிநீர் வரி என்பது சொத்து வரியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், சொத்து வரிக்கேற்ப குடிநீர் வரியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் வணிக மின் பயன்பாட்டு நுகர்வோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சக்தி காரணி அபராதம் (Power Factor Penalty) விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது, சக்தி காரணி என்பது நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார உபகரணத்தின் எதிர்வினை சக்தியால் மின் கட்டத்தில் (Power Grid) ஏற்படும் விளைவு. சக்தி காரணியை சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் பராமரிக்க வேண்டும் என்றிருந்த நிலையில், அனைத்து வணிக மின் உபயோகிப்பாளர்களும் இதனை பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், சக்தி காரணியை பராமரிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபாரதத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, இரண்டு மாதங்களுக்கு 10,000 ரூபாய் என்றிருந்த மின் கட்டணம், தற்போது அபராதத் தொகையுடன் சேர்த்து 15,000 ரூபாய் அளவிற்கு வந்திருக்கிறது. இது குறித்து மக்களின் கருத்தினை கேட்காமலேயே தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் இதுபோன்ற அபராதத்தினை விதித்துள்ளதாகவும், இதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மின் தேக்கிகளை (Capacitors) பொருத்தி அபராதத்தினை தவிர்த்து இருக்கலாம் என்றும் வணிக மின் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கை.

உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருத்திருத்தால், இது குறித்து மக்கள் கருத்தினைக் கேட்டு, அபராதத்தினை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி அதற்குப் பின் சக்தி காரணி அபராதத்தினை விதித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன்மூலம் மக்களிடம் இருந்து எப்படி கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதில்தான் தி.மு.க. அரசு குறியாக இருக்கிறது. என்பதும், மக்கள் நலனில் தி.மு.க.விற்கு அக்கறையில்லை என்பதும் தெளிவாகிறது.

பொதுமக்கள்படும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்காண்டு ஆறு விழுக்காடு சொத்து வரி உயர்வை ரத்து செய்யவும், வணிக மின் பயன்பாட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சக்தி காரணி அபராதத்தை கைவிடவும் முதல்-அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம். pic.twitter.com/HwSh9z0qmD

— O Panneerselvam (@OfficeOfOPS) September 29, 2024

Read Entire Article