பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

2 hours ago 1

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தும்பல் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பெற்றோருடன் தும்பல் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார்.

பின்னர் துணிகள் எடுத்துவிட்டு வெளியே வந்த அவரை அங்கு நின்று கொண்டிருந்த நெய்யமலை அரசு பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார் (வயது 28) என்பவர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி அவரை கண்டித்துவிட்டு அங்கிருந்து பெற்றோருடன் சென்று விட்டார்.இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி ராஜ்குமார் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளை பெறுவதற்காக மாணவி படிக்கும் பள்ளிக்கு வந்தார்.

அப்போது மாணவி அவரை பார்த்ததும் தன்னை ஆபாசமாக பேசியது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்தார். இதற்கு அவர் இதுகுறித்து பின்னர் அந்த ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று கூறி மாணவியை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து பெற்றோரும் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பிளஸ்-2 மாணவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்காலிக பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமாரை பணிநீக்கம் செய்து பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article