சொகுசு கார்களை பரிசாக வழங்கி ரூ.60 கோடி வரை மோசடி கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகைகளுக்கு சம்மன்? சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை

3 hours ago 3

புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகைகளுக்கு சம்மன் அனுப்புவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்தவர் அசோகன் (70). ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனைநம்பி அசோகன் பல்வேறு தவணைகளில் ரூ.98 லட்சத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் வழக்குபதிந்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை கடந்த 26ம்தேதி கோவையில் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் கோவையைச் சேர்ந்த 10 பேர் மோசடி கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கடந்த 2022ல் கோவையில் ஆஷ் பே எனும் பெயரில் நிறுவனம் தொடங்கியபோது, அதன் தொடக்க விழா, மற்ற விழாக்களில் பிரபல நடிகைகள் பங்கேற்று இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

பணம் முதலீடு செய்தவர்களுக்கு பிரபல நடிகைகள் 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கியதாகவும், இதற்கான விளம்பரம் செய்ததற்காக அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தன. மேலும் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோக்கள், செல்லாத கிரிப்டோ காயின்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் தனிப்படை பிரிவு தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக 2 நடிகைகளையும் விசாரிக்க அவர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சட்ட வல்லுனர்கள் மற்றும் நீதித்துறையின் ஆலோசனையை அவர்கள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சைபர் கிரைம் அதிகார வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நித்திஷ்குமார் ஜெயின் ஆஷ் பே நிறுவனத்தில் இயக்குனராகவும், அரவிந்த்குமார் உறுப்பினராகவும் இருந்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக நடிகைகளிடமும் விசாரிக்க சம்மன் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்தபின், நடிகைகளுக்கு முறைப்படி சம்மன் அனுப்பி வைக்கப்படும். கைது செய்யப்பட்ட 2 பேரின் வங்கியில் உள்ள பணம், மோசடியில் சம்பாதித்து பணம் எவ்வளவு, அந்த பணத்தில் எவ்வளவு சொத்துகள் வாங்கப்பட்டது? என்பது குறித்தும், அவர்களது உறவினர்களுக்கு மோசடி பணம் அனுப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்’ என்றனர்.

The post சொகுசு கார்களை பரிசாக வழங்கி ரூ.60 கோடி வரை மோசடி கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகைகளுக்கு சம்மன்? சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article