சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், தனிப்படை போலீசார், குற்றவாளி ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இந்த வழக்கை, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் அவரை மீண்டும் சென்னை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
திருட்டு நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்குகளில் அவர் வேறு எங்காவது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மேலும் 7 திருட்டு வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஞானசேகரனின் தார் ஜீப், கிண்டியில் உள்ள சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்த நிலையில், அதனை பள்ளிக்கரணை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஞானசேகரன் மீது, திருட்டு, கொள்ளை உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post சொகுசு கார்களில் சென்று 7 வீடுகளில் சுமார் 200 பவுன் நகை திருடிய ஞானசேகரன்: திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது appeared first on Dinakaran.