சென்னை: மார்பகப் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த அப்போலோ புற்றுநோய் மையம், சுந்தரி சில்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சேலை கண்காட்சியை நடத்தியது. மார்பக புற்றுநோய் இந்தியப் பெண்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் புற்றுநோய்களுள் ஒன்றாகும்; இது ஒவ்வொரு 100,000 பெண்களில் 25.8 நபர்களை பாதிக்கிறது மற்றும் 100,000 பெண்களில் 12.7 இறப்புகளை ஏற்படுத்துகிறது.
சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற நகர்ப்புறங்களில் இந்த பாதிப்பு நிகழ்வுகள் மிக அதிகமாக உள்ளன. எனவே இது தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்த அப்போலோ புற்றுநோய் மையம் சுந்தரி சில்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சேலை கண்காட்சி நடத்தியது. இந்த கண்காட்சியை நடிகை குஷ்பு சுந்தர் தலைமை விருந்தினராக கலந்து தொடங்கி வைத்தார்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, சுந்தரி சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் பவித்ரா மன்மோகன் ஆகியோரும், விழாவில் கலந்து கொண்டனர். சுந்தரி சில்க்ஸின் புடவைகள் மார்பக புற்றுநோய் ரிப்பன் வடிவில் கலைநயத்தோடும், படைப்பாக்க திறனோடும் பயன்படுத்தப்பட்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக சுனீதா ரெட்டி கூறியதாவது: மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதனை திறம்பட நிர்வகிக்க முடியும். பெண்களுக்கு அறிவையும், விழிப்புணர்வையும் வழங்க இந்த நிகழ்ச்சி உதவும். மார்பக புற்றுநோய்களுக்கு வெறும் சிகிச்சையளிப்பது மட்டும் நோக்கமல்ல; இது குறித்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் உருவாக்கி இவை வராமல் தடுப்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.
The post சேலை கண்காட்சி மூலம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: சுந்தரி சில்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அப்போலோ புற்றுநோய் மையம் நடத்தியது appeared first on Dinakaran.