சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியீடு: ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

18 hours ago 3

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ெஜகநாதனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே வரும் 19ம் தேதியுடன், துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காக முன்னாள் அரசு முதன்மை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜோதி ெஜகநாதனை ஒருங்கிணைப்பாளராக கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்கலைக்கழக செனட் சார்பில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், சிண்டிகேட் சார்பில் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தங்கராஜூ ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தேடுதல் குழுவின் நோடல் அதிகாரியாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணை பதிவாளர் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், வரும் ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, `பெரியார் பல்கலைக்கழகச் சட்டம், 1997’-ல் அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவம் உள்ள உயர் தகுதி, நேர்மை, ஒழுக்கம் மற்றும் நிறுவன அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை கொண்ட சிறந்த கல்வியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை தேடுதல் குழு வரவேற்கிறது. இதுசார்ந்த தகவல்கள், பெரியார் பல்கலைக்கழக இணையத்தளத்தில் உள்ளது.

உரிய தகுதிகள் மற்றும் பணி அனுபவம் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெரியார் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிடிஎப் வடிவில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் ஒரு நகலை தபால் மூலம் ஜூன் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பெரியார் பல்கலைக்கழக தேடல் குழுவின் நோடல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியீடு: ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article