செம்பனார்கோவில்: ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி கொள்கைப்படி மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை’ என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மூலம் கபளீகரம் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. தமிழக அரசின் கல்வித்திட்டத்தில் இதுவரையில் உள்ள நடைமுறையை ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை 2025 என யுஜிசி வரைவறிக்கையை கொண்டு வந்துள்ளது. அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் மூலமாக ஒன்றிய அரசுக்கும், யுஜிசிக்கும் அனுப்பியிருந்தோம்.
அதனையொட்டி தற்போது 9 மாநிலங்களில் இதனை எதிர்த்து தீர்மானம் இயற்றியுள்ளனர். துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கு மூன்று பேர் கொண்ட தேடுதல் கமிட்டி அமைத்து இருந்தோம். அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக கமிட்டிகளை ஆளுநர் ரத்து செய்கிறார். அந்த கமிட்டியில் யுஜிசியால் தேர்வு செய்யப்படும் நபரும் இருக்க வேண்டும். அவர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கும் ஒருவரை தான் துணைவேந்தராக கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வந்த நபர்களை ரத்து செய்வாராம்.
அவர் நியமன உறுப்பினரை நியமிக்க சொல்வாராம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. கவர்னரே ஒரு நியமனம், நியமனம் ஒரு நியமனத்தை செய்யலாமா? மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு கொண்டு வந்த குழுவை இவர் ரத்து செய்கிறார். இதனை கண்டிக்கிற விதமாக மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தன்னெழுச்சியாக மின்னஞ்சல் மூலமாக ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி கொள்கையின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. அதனை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி மாணவர் சேர்க்கை நடக்கவில்லை: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.